மாநாட்டின் நோக்கம்உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை (உ.த.எ.மா.) நடத்த வேண்டுமென்பது சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் நீண்டகாலக் கனவாக இருந்தது. அது குறித்து நாங்கள் சுமார் 10 ஆண்டுகளாகச் சிந்தித்து வந்தோம். ஆனால் பல்வேறு காரணங்களால் அத்திட்டம் ஈடேறவில்லை. ஆயினும் இப்போது அதற்குரிய நேரமும் வளங்களும் வந்துவிட்டன. ஆழ்ந்த விவாதங்களுக்கும் திட்டமிடுதலுக்கும் பிறகு சிங்கப்பூர் தகவல், தொடர்பு, கலை அமைச்சின் கீழுள்ள தேசியக் கலை மன்றத்தை அணுகினோம். அவர்கள் மாநாட்டை ஆதரிக்கத் தயார் என்று தெரிவித்தனர். ஈராண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் எழுத்தாளர் விழா 2011 அக்டோபரில் நடைபெறும்போது இம்மாநாட்டை நடத்த அவர்கள் ஆலோசனை கூறினர். இப்போது எங்கள் கனவு நனவாகியுள்ளது. உ.த.எ.மா. இதுவரை அதிகம் பேசப்படாத ஒன்றை மையக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது. அது: “தாயகம் கடந்த தமிழ் இலக்கியம்”. தமிழ் இலக்கியம் குறித்துப் பல்வேறு மாநாடுகள் நடைபெற்ற போதிலும் தாயகம் கடந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றிக் கவனம் செலுத்தப்படவில்லை. அவர்களின் விருப்பங்களும் கவலைகளும் அவர்களின் அனுபவங்களும் கருத்துகளும் தமிழ் நாட்டில் உள்ள “தாயக” எழுத்தாளர்களிடம் இருந்து பெரிதும் மாறுபட்டவை. ஆகவே, இந்த மாநாடு உலகம் முழுவதும் பரந்த அளவிலும் ஆழமான வேர்களுடனும் பரவியிருக்கும் தாயகம் கடந்த தமிழ் எழுத்தாளர்களின் இலக்கியப் படைப்புகளை பருந்துப் பார்வையில் ஆராயவும் மதிப்பீடு செய்யவும் முயல்வதாக அமையும். கன்னி முயற்சி எனும் வகையில் இந்த மாநாடு, சோதனை முயற்சி. தலைப்புகளும் படைப்பாளர்களும் தாயகம் கடந்த தமிழர்களின் வளமான படைப்புக்களையும் வேறுபட்ட குரல்களையும் எதிரொலிப்பார்கள் என நம்புகிறோம். தாயகம் கடந்த தமிழ் இலக்கிய உலகினை ஆவணப்படுத்தும் நீண்ட பயணத்தில் இது முதல் முயற்சியே. |

