பதாகை
முகப்பு நிகழ்ச்சிகள் கண்ணதாசன் விழா

முனைவர் இளவழகன் முருகனுக்குக்

கவியரசு கண்ணதாச​ன் விருது

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் வழங்கி வரும் கவியரசு கண்ணதாசன் விருது 2014ஆம் ஆண்டு முனைவர் இளவழகன் முருகனுக்கு வழங்கப்பட்டது. 15.11.2014 சனிக்கிழமை அன்று நடைபெற்ற கவியரசு கண்ணதாசன் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் திரு. இரா. தினகரன் அவ்விருதினை அவருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.

கவியரசு கண்ணதாசன் விருது பெற்ற முனைவர் இளவழகனுக்கு வயது 34. அவர் ஒரு கவிஞர், பாடலாசிரியர், நாடக எழுத்தாளர், நடிகர், இயக்குநர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் B.Tech., சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் M.Sc., நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் முனைவர் ஆகிய பட்டங்களைப் பெற்று, Duke-NUS மருத்துவப் பள்ளியில் பயிற்றுவிப்பாளராகவும் சிங்கப்பூர் கண் ஆய்வுக் கழகத்தில் முனைவர் பட்டத்துக்குப் பிந்திய ஆய்வு விஞ்ஞானியாகவும் பணியாற்றும் அவர் தமது ஓய்வு நேரத்தில் தமிழ்ப் படைப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

பாரம்பரியமிக்க சிறந்த குடும்பத்தில் பிறந்த அவரின் தந்தை கணிதப் பேராசிரியர், தாய் தமிழ்ப் பேராசிரியை. தமிழ் நாடு சட்டப் பேரவையின் தலைவராக 1970களில் இருந்த புலவர் கோவிந்தனின் தாய்வழிப் பெயரன் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அபிராமி நகைக் கடை உரிமையாளர் திரு. எஸ். பழனியப்பன் ஆதரவில் கவியரசு கண்ணதாசன் பொன் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

அரங்கம் நிறைந்த கூட்டத்துடன் அருள்மிகு தண்டாயுதபாணி கோயில் மண்டபத்தில் மாலை மணி 5.30க்குத் தொடங்கிய கவியரசு கண்ணதாசன் விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் திரு. இரா. தினகரன், கண்ணதாசனின் வாழ்க்கை வரலாறு, அவருடைய பாடல்கள், கவிதைகள் முதலியவற்றை மேற்கோள் காட்டி நீண்ட உரையாற்றினார்.

சிறப்புப் பேருரையாற்றிய மரபின் மைந்தன் முத்தையா கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகள், அவரது வாழ்க்கையில்  நடந்த சம்பவங்கள் ஆகியவற்றைச் சுவையுடன் எடுத்துக் கூறி அனைவரையும் கவர்ந்தார்.

சிறப்புரை ஆற்றிய கவிப்பேரரசு வைரமுத்துவின் புதல்வர் கபிலன் வைரமுத்து. கண்ணதாசனின் பாடல்களும் கவிதைகளும் தன்மீது ஏற்படத்திய தாக்கத்தை மேற்கோள்களுடன் அழகாக எடுத்துரைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

திருமதி வசந்தி ராமச்சந்திரன் கவியரசரின் எங்கும் எதிலும் தமிழோசை எனும் தமிழ் வாழ்த்துப் பாடலைப் பாடினார். திருவருட்செல்வர் படத்தில் இடம்பெற்ற மன்னவன் வந்தானடி பாடலுக்குச் செல்வி மீனலோசனி ஆனந்த் கண்கவர் நடனம் ஆடினார்,

கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டிகளின் இறுதிச் சுற்றில் 14 வயதிற்குக் கீழள்ளவர்களுக்கான பிரிவில் உன்னை ஒன்று கேட்பேன் பாடலைப் பாடிய மருனாளினி கார்த்திக் முதல் பரிசைத் தட்டிச் சென்றார். 14 வயதிற்கு மேலுள்ளவர்களுக்கான பிரிவில் வான் நிலா நிலா அல்ல பாடலைப் பாடி சேதுராமன் என்.எஸ். முதல் பரிசை வென்றார்.

 

எழுத்தாளர் கழகச் செயலாளர் திரு. சுப. அருணாசலம் வரவேற்புரை ஆற்ற தலைவர் திரு. நா. ஆண்டியப்பன் தலைமையுரை ஆற்றினார். பொருளாளர் திரு. சு. முத்துமாணிக்கம் நன்றி கூறினார். செயலவை உறுப்பினர் திரு. எம்.கே. குமார் போட்டிகளை வழிநடத்தினார்.கண்ணதாசன் விழா 2014 படங்கள்

1 dinakaran.jpg 2 kabilan.jpg 3.jpg 4 sing.jpg 5 audience.jpg 6.jpg

 


பதாகை
பதாகை
பதாகைCopyright © 2011 singaporetamilwriters.com